கொரோனா வழிகாட்டு நெறிமுறை மீறல்: அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேருக்கு அபராதம் விழுப்புரத்தில் அதிகாரி நடவடிக்கை

கொரோனா வழிகாட்டு நெறிமுறையை மீறி அதிகளவில் பயணிகளை ஏற்றி வந்ததாக அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேருக்கு அதிகாரி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2021-08-01 16:57 GMT
விழுப்புரம், 

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதில் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இதை மீறி செயல்படுபவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். 

அந்த வகையில், நேற்று விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் மற்றும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

கூடுதல் பயணிகள்

அப்போது பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆய்வு செய்த போது புதுச்சேரியில் இருந்து வந்த அரசு பஸ்சில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அதிக அளவு பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.

  இதை பார்த்த தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், அந்த பஸ்சை நிறுத்தி கண்டக்டரை எச்சரித்தார். அதோடு அவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.  

இதேபோல் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்த போது, அந்த வழியாக அதிகளவில் பயணிகளை ஏற்றிவந்த தனியார் பஸ்சின் கண்டக்டருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும் செய்திகள்