ரூ.15 லட்சத்தில் நன்னீர் மீன்கள் கண்காட்சி அரங்கம்

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.15 லட்சத்தில் நன்னீர் மீன்கள் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-08-01 16:57 GMT
கூடலூர்

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.15 லட்சத்தில் நன்னீர் மீன்கள் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட நாடுகாணியில் சுமார் 350 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அடர்ந்த வனத்தை கண்டு ரசிப்பதற்காக காட்சிமுனை கோபுரம், அரிய வகை தாவரங்களை பராமரித்தல் மற்றும் அதன் திசுக்களை உருவாக்குதலுக்கான ஆராய்ச்சி மையம், ஆர்கிட்டோரியம், பெரணி இல்லங்கள், அருங்காட்சியகம் ஆகியவை காணப்படுகிறது. 

கொரோனா பரவலுக்கு முன்பு வன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சுற்றுலா மையமாக நாடுகாணி தாவரவியல் பூங்கா விளங்கியது. ஆனால் தற்போது கொரோனா பரவலால் பூங்கா மூடப்பட்டு உள்ளது. எனினும் அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

மீன்கள் கண்காட்சி அரங்கம்

அந்த வகையில் புல் தரைகள் அமைத்து, வனவிலங்குகளின் மாதிரி உருவங்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.15 லட்சம் செலவில் நன்னீர் மீன் கள் கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு கண்ணாடி தொட்டிகளில் அழிவின் பிடியில் உள்ள நன்னீர் மீன்களை வனத்துறையினர் மீட்டு வளர்த்து வருகின்றனர்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வாழக்கூடிய விலாங்கு, ஆரல், கவுலி, கல்லுகொரவா, வயநாடன் குயில், பரல், ரோசி பாப்பா உள்பட 20 வகையான மீன்கள் மற்றும் அழிவின் பிடியில் உள்ள வண்ண மீன்களை வளர்க்கின்றனர். இவற்றை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கண்டு ரசிக்க தேவையான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அந்த அரங்கத்துக்கு ஆரல் என்று பெயர் சூட்டப்பட்டு, பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.

90 சதவீத பணிகள் முடிவு

இதுகுறித்து நாடுகாணி தாவரவியல் பூங்கா வனச்சரகர் பிரசாத் கூறியதாவது:- நீலகிரியில் உள்ள நீர்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காணப்பட்ட மீன்களில், பெரும்பாலானவை அழிந்துவிட்டன. இனிவரும் காலங்களில் தற்போது காணப்படும் மீன்கள் அழியாமல் இருக்கும் வகையிலும், அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் வகையிலும் நன்னீர் மீன்கள் கண்காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும். இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் நிறைவு பெற்றவுடன் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று பொதுமக்களின் பார்வைக்காக அரங்கம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்