நள்ளிரவில் ஜன்னல் வழியாக படுக்கை அறையை எட்டி பார்க்கும் சைக்கோ வாலிபர்

துடியலூர் அருகே நள்ளிரவில் ஜன்னல் வழியாக படுக்கை அறையை ‘சைக்கோ’ வாலிபர் எட்டி பார்த்து வருகிறார். இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Update: 2021-08-01 16:42 GMT
துடியலூர்

துடியலூர் அருகே நள்ளிரவில் ஜன்னல் வழியாக படுக்கை அறையை ‘சைக்கோ’ வாலிபர் எட்டி பார்த்து வருகிறார். இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். 

‘சைக்கோ’ வாலிபர் 

கோவையை அடுத்த துடியலூர் அருகே தொப்பம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக ‘சைக்கோ’ வாலிபர் நடமாடி வருகிறார். 

பகல் நேரத்தில் மறைந்து இருக்கும் அந்த நபர் நள்ளிரவு நேரத்தில் அந்தப்பகுதியில் நடமாடுகிறார். பின்னர் அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டபடி செல்லும் அவர், ஜன்னல் திறந்து இருந்தால் மட்டுமே சுவர் ஏறி குதித்து உள்ளே செல்கிறார். 

படுக்கை அறை

பிறகு படுக்கை அறை ஜன்னல் எது என்று பார்த்து அங்கு சென்று அந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து வருகிறார். படுக்கை அறை ஜன்னல் மூடி இருந்தால் உடனே அந்த வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார். 

இப்படி படுக்கை அறை ஜன்னலை மட்டும் சைக்கோ வாலிபர் எட்டி பார்த்து வருவதால், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் துடியலூர் போலீசில் புகார் செய்தும் உள்ளனர். 

போலீசார் விசாரணை 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபருக்கு 25 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.

மேலும் இரவு நேரம் என்பதால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை. இருந்தபோதிலும் போலீசார் அங்கு இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

தீவிர கண்காணிப்பு 

கடந்த ஒருவாரமாக இங்கு நடமாடும் சைக்கோ நபர் நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை இதுபோன்று செய்து வருகிறார். ஒரு வீட்டின் படுக்கை அறையை எட்டி பார்த்தபோது, அதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அலறினார்கள்.

 உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் பகுதியில் இது போன்றுதான் மர்ம ஆசாமி அச்சத்தை ஏற்படுத்தி வந்தார். 

தற்போது இங்கும் சைக்கோ வாலிபர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார். எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்