கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான ரூ 4348 கோடி கடன் திட்ட அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான ரூ.4 ஆயிரத்து 348 கோடியே 58 லட்சம் கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்

Update: 2021-08-01 16:42 GMT
கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

நடப்பு நிதி ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கை குறித்து அனைத்து வங்கி மேலாளர், அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியன் வங்கியின் கடலூர் மண்டல மேலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் வரவேற்றார். 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான  ரூ.4 ஆயிரத்து 348 கோடியே 58 லட்சம் கடன் வழங்க திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட அதை இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.

விவசாயத்துக்கு ரூ.3,355 கோடி

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான வருடாந்திர திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களான நடப்பு நிதி ஆண்டுக்கான(2021-2022) வருடாந்திர கடன் திட்டத்தில் மாவட்டத்துக்கு ரூ.4 ஆயிரத்து 348 கோடியே 58 லட்சம் கடன் திட்டம் நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு தனித்துவ முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை சார்ந்த கடன் ரூ.3 ஆயிரத்து 355 கோடியே 10 லட்சம், தொழில் சார்ந்த கடன் ரூ.240 கோடி மற்றும் இதர வகையான கடன் வழங்க ரூ.753 கோடியே 48 லட்சம் நடப்பாண்டு வழங்க நிரணயிக்கப்பட்டுள்ளது. 

பயனாளிகள் வளர்ச்சி

எனவே இந்த கடன் திட்டத்தை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தும் பட்சத்தில் பயனாளிகள் வளர்ச்சி பெறுவதுடன், மாவட்டமும் வளர்ச்சி பெறும் என்றார்.
கூட்டத்தில் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் புவனேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் தெய்வநாதன், தாட்கோ மாவட்ட மேலாளர் குப்புசாமி, மாவட்ட தொழில் மைய இளநிலை பொறியாளர் ஜியாஸ், மாவட்ட கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் இந்திரா மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்