மருதமலை பேரூர் உள்பட 4 கோவில்களில் தரிசனத்துக்கு தடை
கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா காரணமாக மருதமலை, பேரூர் உள்பட 4 கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கோவை
கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா காரணமாக மருதமலை, பேரூர் உள்பட 4 கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மீண்டும் கொரோனா
கோவையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எனவே தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
ஆடிமாதத்தில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். அதன்படி திங்கட்கிழமை, ஆடிக் கிருத்திகை, புதன்கிழமை ஆடிப்பெருக்கு மற்றும் 8-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்பட உள்ளது.
பக்தர்களுக்கு தடை
இதில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவில், மருதமலை முருகன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களில் புதன்கிழமை வரையும், 8-ந் தேதியும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து 4 கோவில்களில் வழக்கமாக, நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் மட்டும் நடந்தன. ஆனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பினர்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை என்ற அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தெரியாமல் சில பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் கோவில் வாசலில் நின்றவாறு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். கோவை மருதமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அங்கு வழக்கம்போல பூஜைகள் செய்யப்பட்டன.