கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Update: 2021-08-01 16:19 GMT
பென்னாகரம்:
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
நீர் திறப்பு குறைப்பு
கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரத்து 240 கனஅடியாக குறைக்கப்பட்டது.
8 ஆயிரம் கனஅடி
இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.  இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும்  காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்