மின்வாரியத்தின் மூலம் நடப்படும் புதிய மின்கம்பங்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மின்வாரியத்தின் மூலம் நடப்படும் புதிய மின்கம்பங்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2021-08-01 16:18 GMT
போடிப்பட்டி
மின் வாரியத்தின் மூலம் நடப்படும் புதிய மின்கம்பங்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுமா?  என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
தெரு விளக்குகள்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மின் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை இணைப்பதற்கான வழித்தடத்தில் கான்கிரீட் மின் கம்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் இரும்பாலான மின் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் மின் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவற்றுக்கு மாற்றாக இந்த வகை மின் கம்பங்கள் பயன்படுத்தத் தொடங்கினர். 
கிராமப்பகுதிகளில் தெருவிளக்குகள் மற்றும் வீடுகளுக்கான பியூஸ்கள் இந்த மின் கம்பங்களிலேயே பொருத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் வாகனங்கள் மோதினாலும் இந்த கம்பங்கள் உடையாமல் வளைந்து தொங்கும். அந்த அளவுக்கு உறுதியான கம்பிகள் கொண்டு கான்கிரீட் அமைக்கப்பட்டிருந்தது.
துண்டான மின் கம்பம்
ஆனால் தற்போது பயன்பாட்டுக்கு வரும் புதிய கம்பங்கள் லேசான அதிர்விலேயே துண்டாக உடையுமளவுக்கு உறுதியற்றதாக இருக்கிறது.குடிமங்கலத்தையடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் மின்வாரியத்தால் கொண்டு வரப்பட்ட புதிய மின் கம்பங்கள் லாரியிலிருந்து கீழே இறக்கும் போதே இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. 
அதனை அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.  இதுபோன்ற உறுதியற்ற மின் கம்பங்கள் மின் விபத்துகளுக்கு வழி வகுப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
எதிர்பாராத விதமாக மின் கம்பிகளில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தால் கூட இந்த மின் கம்பங்கள் துண்டாகி விடும் அபாயம் உள்ளது.எனவே தற்போதுள்ள புதிய மின் கம்பங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்'என்று அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்