சூறாவளி காற்றின் வேகத்தால் பெருமளவு இலைகள் கிழிந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை
சூறாவளி காற்றின் வேகத்தால் பெருமளவு இலைகள் கிழிந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் வாழை இலைகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் சூறாவளி காற்றின் வேகத்தால் பெருமளவு இலைகள் கிழிந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சீரான வருவாய்
உடுமலை பகுதியில் ஆண்டுப் பயிரான வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தார் வாழை சாகுபடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருவாய் பெற முடியும் என்ற சூழல் உள்ளது. அதேநேரத்தில் இலைகள் விற்பனை மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வருவாய் பெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒருசில விவசாயிகள் இலைவாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதற்கென பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட ரகங்களைப் பயிரிடுகின்றனர். இந்த நிலையில் உடுமலை பகுதியில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் பெருமளவு இலைகள் கிழிந்து வீணாகி வருவதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாழை சாகுபடியைப் பொறுத்தவரை தார் வாழைகள் சாகுபடி செய்யும்போது காற்றிலிருந்து பாதுகாப்பதற்கு முட்டு கொடுத்தல், கயிறு கட்டுதல் உள்ளிட்ட பலவேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் 10 மாதத்தில் தார் அறுவடை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருமானம் கிடைக்கும்.
கொரோனா அச்சுறுத்தல்
அதேநேரத்தில் இலை வாழை சாகுபடியைப் பொறுத்தவரை 6 ம் மாதத்திலிருந்தே அறுவடை செய்யத்தொடங்கலாம். தோப்பில் ஒருநாள் விட்டு ஒருநாள் இலை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு மரத்திலும் 7 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை புதிய இலைகள் உற்பத்தியாகும். ஒவ்வொரு மரத்திலும் பக்கவாட்டிலும் 4 கன்றுகள் வரை விட்டுப் பராமரிக்கலாம்.
2 ஆண்டுகள் வரை பலன் பெறலாம். இதனால் ஆண்டு முழுவதும் இலை மூலம் வருமானம் பெற முடியும். மேலும் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்களில் இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய நாள் முதல் ஓட்டல்களில் விற்பனை குறைவு, திருமண நிகழ்வுகளுக்கு கெடுபிடிகள் போன்ற காரணங்களால் வாழை இலைகள் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது.
காற்றின் வேகம்
பொதுவாக ஆடி மாதத்தில் சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் நடக்காவிட்டாலும் திருவிழாக்கள் போன்றவை அதிக அளவில் நடக்கும் என்பதால் இலைகளுக்குத் தேவை அதிகம் இருக்கும்.தற்போது திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி இல்லாததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாழை இலைகள் கொண்டு செல்ல முடிவதில்லை.
உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழை இலைகளைக் கொண்டு வந்த நிலை மாறி உள்ளூரிலேயே தேக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.இதனால் விற்பனைக் குறைவுடன் விலை குறைவும் ஏற்பட்டுள்ளது.அதேநேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இலைகள் அதிக அளவில் சேதமடைகின்றன. இதனால் பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.