மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

மொரப்பூர் அருகே மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.;

Update: 2021-08-01 16:14 GMT
மொரப்பூர்,

மொரப்பூர் அருகே உள்ள சாமண்டஅள்ளி புதூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயசிங் (வயது 25). இவர் பாலிடெக்னிக் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அம்மாபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் கடையின் விற்பனையாளர் பழுதை நீக்குமாறு ஜெயசிங்கை அழைத்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அவர் மின்கம்பத்தில் ஏறி மின் வயரை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெயசிங்கை மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்