கோட்டூர் அருகே ரெங்கநாதபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோட்டூர் அருகே ரெங்கநாதபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-01 16:05 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் ரேஷன்கடை உள்ளது. இங்கு சோத்திரியம், எக்கல், கண்டகரயம், ரெங்கநாதபுரம், வடக்கு தெரு, தெற்கு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 580 குடும்ப அட்டை தாரர்களுக்கு வேண்டிய அரிசி பாமாயில் மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கட்டிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் குறுகிய இடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகாலிங்கம் தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பழுதடைந்த கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டக்கோரி ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி குணசேகரன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்