மூலனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை
மூலனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை
மூலனூர், ஆக.2-
மூலனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் திருநீலகண்டபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. சிலை வடிக்கும் சிற்பி. இவருடைய மனைவி கிருத்திகா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பொன்னுச்சாமி சிலை வடிக்க அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இதனால் கிருத்திகாவுக்கும், மூலனூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த சிற்பி கந்தசாமி (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
கந்தசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளான். ஆனால் கந்தசாமிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கந்தசாமியின் மனைவி, கந்தசாமியை விட்டு, பிரிந்து மகனுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
குத்திக்கொலை
இதனால் தனியாக வசித்து வந்த கந்தசாமி, தனது கள்ளக்காதலி கிருத்திகாவுடன் நெருக்கத்தை அதிகமாக்க முடிவு செய்தார். இதற்காக திருநீலகண்டபுரத்தில் கிருத்திகாவின் வீடு அருகிலேயே ஒரு வாடகைக்கு வீடு பிடித்து அதில் குடியிருந்து வந்தார். இதனால் கந்தசாமி வீட்டிற்கு கிருத்திகா வருவதற்கும், கிருத்திகா வீட்டிற்கு கந்தசாமி செல்வதற்கும் வசதியாகி போனது.
இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தனர். இதனால் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் கணவர் பொன்னுச்சாமிக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இடையேயான கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. கந்தசாமியும், கிருத்திகாவும் கணவன்-மனைவி போல் சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் கந்தசாமி வீட்டிற்கு கிருத்திகா வந்துள்ளார். அப்போது கந்தசாமிக்கும், கிருத்திகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், கிருத்திகாவை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா துடிதுடித்து இறந்தார்.
கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்
இந்த கொலை குறித்து மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மூலனூர் போலீசார் மற்றும் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த கிருத்திகாவின் உடல் அருகே கிடந்த செல்போன் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீஸ் மோப்பநாய் டெவில் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் கிருத்திகாவின் உடலில் இருந்து மோப்பம் பிடித்தபடி சின்னாரவலசு வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கை ரேகை நிபுணர்களும் வரழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கள்ளக்காதலன் சிற்பி கந்தசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.