பேச்சுவார்த்தைக்கு சென்ற தாசில்தாரை முற்றுகையிட்ட கிராமமக்கள் 27 பேர் மீது வழக்கு

குஜிலியம்பாறை அருகே சாலை பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற தாசில்தாரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-08-01 21:09 IST
குஜிலியம்பாறை :
குஜிலியம்பாறை அருகே உள்ள மல்லபுரம் கிராமம் தாசல்நாயக்கனூரை சேர்ந்த இருதரப்பினருக்கு இடையே சாலை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. மேலும் இந்த சாலையை பொன்னம்பட்டி, பழனிகவுண்டன்புதூரை சேர்ந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் பனைமரத்தை சாலையின் குறுக்கே போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினரும், பொன்னம்பட்டி, பழனிகவுண்டன்புதூர் கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு தாசல்நாயக்கனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை தாசில்தார் சுப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். இரவு 9.30 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் மற்றொரு தரப்பினரும், கிராமமக்களும் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர். 
இதுகுறித்த தகவலின்பேரில் குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சத்யபிரபா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அதிகாரிகளை விடுவித்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த பனைமரமும் அப்புறப்படுத்தப்பட்டது. 
பின்னர் இந்த பிரச்சினை குறித்து முறையாக தாசில்தாரிடம் மனு அளித்து தீர்வு காணவேண்டும் என்று போலீசார் அறிவுரை கூறினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்ைப சேர்ந்த 27 பேர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்