மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் என்ஜினீயர் பலி நண்பர் படுகாயம்
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
பழனி:
பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் அஜீத் (வயது 25). கோவையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த அஜீத், நேற்று உறவினரான பழனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த துரைராஜ் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பழனி-கொடைக்கானல் சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அஜீத் ஓட்டினார். பழனி வரதமாநதி அணை பகுதியில் சென்றபோது, எதிரே கொடைக்கானலில் இருந்து கேரளா நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அஜீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துரைராஜ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த துரைராஜை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்ைசக்காக அனுப்பினர். மேலும் அஜீத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.