மயிலாடுதுறையில், முன்விரோதத்தில் அ.தி.மு.க. பேச்சாளரை தாக்கிய அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் முன்விரோதத்தில் அ.தி.மு.க. பேச்சாளரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை திருவிழந்தூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் மணவைமாறன் (வயது 68). இவர் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளராக உள்ளார். ஏற்கனவே ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவருக்கும், இவருடைய சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணவைமாறன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த அவரது சகோதரர்கள் சீதாராமன், சீனிவாசன் ஆகியோர் சத்தம்போட்டு திட்டி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணவைமாறனை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த மணவைமாறன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணவைமாறன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாராமன், சீனிவாசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் சீதாராமன், தன்னை மணவைமாறன் தாக்கியதாக மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.