புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 9-ந்தேதி மனித சங்கிலி போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வருகிற 9-ந்தேதி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது என விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாங்கண்ணி,
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உமாநாத் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம் கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, ஒருநாள் ஊதியமாக ரூ.300 வழங்க வேண்டும். 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை, அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்தவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை , கீழ்வேளுர், வேதாரண்யம் ஆகிய இடங்களில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், ஒன்றிய செயலாளர் ஏ. முருகையன், விவசாயிகள் சங்க தலைவர் அப்துல் அஜீஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன்,மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனா்.