நீலாங்கரை பண்ணை வீட்டில் மதுவிருந்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்; போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த நீலாங்கரையில் இருந்து முட்டுகாடு வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளன. தற்போது கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள பண்ணை வீடுகளீல் அனுமதியின்றி பிறந்தநாள் கொண்டாட்டம், மதுவிருந்து ஆகியவை நடைபெறாத வண்ணம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையை அடுத்த கானத்தூர் அருகே உத்தண்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மதுவிருந்து மற்றும் உணவு பரிமாறப்பட்டது. பின்னர் வாணவேடிக்கைகள் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கானத்தூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் விரைந்து சென்று பண்ணை வீட்டில் பிறந்த கொண்டாடியவர்களிடம் ஊரடங்கு காலத்தில் கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளதால் அனைவரும் வெளியேற வேண்டும் என எச்சரித்தனர். மேலும் இது தொடர்பாக கானத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.