கர்நாடகத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி; மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக பசவராஜ் பொம்மை பேட்டி

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், கர்நாடகத்திற்கு 1 கோடி தடுப்பூசி வழங்க மத்திய அரசு சம்மதித்திருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.;

Update: 2021-07-31 20:42 GMT
பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரியுடன் சந்திப்பு

  முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றதை தொடர்ந்து, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருந்தார். டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை அவர் சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

  அப்போது கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் கூடுதல் கொரோனா தடுப்பூசியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம், பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார். அப்போது அவர், கர்நாடகத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று உறுதி அளித்தார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.800 கோடி நிதி

  கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. கொரோனா 3-வது அலை உருவாதை தடுக்கவும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் கேட்டுக் கொண்டேன்.

  தீவிர கண்காணிப்பு பிரிவு, ஆக்சிஜன், பிற மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொள்ள ஏற்கனவே மத்திய அரசு வழங்குவதாக அறிவித்திருந்த ரூ.800 கோடி கூடிய விரைவில் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

1 கோடி தடுப்பூசி

  கர்நாடகத்திற்கு 1½ கோடி கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார். இதன்மூலம் மாநில மக்களுக்கு தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தடுப்பூசியை மக்களுக்கு வேகமாக செலுத்துவதன் மூலம் கொரோனா 3-வது அலையை எதிர் கொள்ளவும், 3-வது அலை உருவாகாமல் தடுக்கவும் முடியும்.

  மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசி கிடைத்ததும், மாநிலத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும். கொரோனா 3-வது அலை உருவாதை தடுக்க தற்போதில் இருந்தே அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மராட்டியம், கேரள மாநிலங்களில் இருந்து பெங்களூரு உள்பட கர்நாடகத்திற்கு வருபவர்களை கண்காணிக்கவும், அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்காகவும் தனியாக வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

  அதுபோல் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து பேசினார். அரை மணிநேரத்திற்கும் மேலாக 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இந்த சந்திப்பின் போது கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கும்படி நிர்மலா சீதாராமனிடம், பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.

  குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரியை ஒதுக்கும்படியும் நிர்மலா சீதாராமனிடம் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார். அதாவது கடந்த ஆண்டு(2020) கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியாக ரூ.12 ஆயிரம் கோடியை வழங்கி இருந்தது.

ரூ.11 ஆயிரம் கோடி பாக்கி

  ஆனால் ரூ.11 ஆயிரம் கோடியை கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஒதுக்காமல் பாக்கி வைத்துள்ளது. அந்த ரூ.11 ஆயிரம் கோடியை உடனடியாக கர்நாடகத்திற்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு (2021) கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. வரி ரூ.18 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும். அதனை கடனாக பெற்றுக் கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

  அந்த ரூ.18 ஆயிரம் கோடியையும் கர்நாடகத்திற்கு வழங்க வேணடும். கொரோனா காரணமாக மாநிலத்தில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கர்நாடகத்திற்கு வரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி நிர்மலா சீதாராமனிடம் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்