விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம்; கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு

விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கையை 4-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய ஹாசன் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-31 20:34 GMT
பெங்களூரு:

60 குரங்குகள் சாகடிப்பு

  கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர்-சக்லேஷ்புரா தாலுகாக்களுக்கு இடைப்பட்ட சவுடனஹள்ளி ரோட்டில் கடந்த 28-ந்தேதி சாக்குப்பை மூட்டைகள் கிடந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் அந்த சாக்குப்பை மூட்டைகளை அவிழ்த்து பார்த்தனர்.
  அவற்றுள் குரங்குகள் செத்த நிலையில் கிடந்தன. 15 குரங்குகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தன. அதை மீட்டு பேளூர் வனத்துறையினர் உதவியுடன் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

  வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் விஷம் வைத்து 60-க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தோட்டத்தில்
புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வந்ததால் யாரோ ஒரு விவசாயி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பெரும் அதிர்ச்சி

  இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த மனிதநேயமற்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் வாயில்லா ஜீவன்கள் என நினைக்காமல் விஷம் வைத்து குரங்குகளை சாகடித்த கயவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

தாமாக முன்வந்து வழக்கு

  இந்த நிலையில் விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து (சூமோடா) வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடந்தது.

  அப்போது நீதிபதி, பத்திரிகைகளில் வந்த செய்திப்படி விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன. பின்னர் சாகுப்பைகளில் அதன் உடல்களை கட்டி வீசியுள்ளனர். இந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் படி விசாரிக்க வேண்டும். இந்த சம்பவம் விலங்குகளின் வாழ்வுரிமையை பறித்துள்ளது.

4-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல்

  எனவே இந்த சம்பவம் 1960-ம் ஆண்டு விலங்கு கொடுமை சட்டத்தின் 3 மற்றும் 11-வது பிரிவுகளை முழுமையாக மீறுவதாகும். குரங்குகளை கொன்றவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இத்தகைய மனிதாபிமானமற்ற மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டிய அவசியமும்
உள்ளது.

  இந்த சம்பவம் பற்றியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கோர்ட்டில் வருகிற 4-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள்

  மேலும் இந்த வழக்கில் கர்நாடக அரசின் வனத்துறை முதன்மை செயலாளர், ஹாசன் மாவட்ட உதவி வன பாதுகாவலர், ஹாசன் கலெக்டர், ஹாசன் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் விலங்குகள் நல வாாரிய தலைவர் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்க்க, பதிவாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்