கர்நாடகத்தில் புதிதாக 1,987 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,987 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 29 லட்சத்து 5 ஆயிரத்து 124 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் 450 பேர், தட்சிண கன்னடாவில் 365 பேர், மைசூருவில் 177 பேர், உடுப்பியில் 148 பேர், துமகூருவில் 108 பேர், ஹாசனில் 105 பேர் உள்பட 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. பீதரில் மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.
பெங்களூரு நகரில் 11 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், ஹாசனில் 4 பேர் உள்பட 15 மாவட்டங்களில் 37 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 36 ஆயிரத்து 562 ஆக அதிகரித்து உள்ளது. மற்ற 15 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. நேற்று 1,632 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை 28 லட்சத்து 44 ஆயிரத்து 742 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 23 ஆயிரத்து 796 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.