கொல்லிமலையில் காப்பித்தூள், மிளகு விற்பனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

கொல்லிமலையில் காப்பித்தூள், மிளகு விற்பனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Update: 2021-07-31 20:26 GMT
நாமக்கல்:
கொல்லிமலையில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினரின் காப்பித்தூள் மற்றும் மிளகு விற்பனை நிலையத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
காப்பித்தூள் உற்பத்தி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் கொல்லிமலையை சேர்ந்த 28 தொழில் குழுக்களை கொண்டு ஒருங்கிணைந்த அரப்பளி காபி மற்றும் மிளகு உற்பத்தியாளர் கூட்டமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. கொல்லிமலை மக்கள் தாங்கள் உற்பத்தி செய்த காப்பி மற்றும் மிளகை அந்த தொழில் கூட்டமைப்பில் வழங்கி வருகின்றனர்.
அரப்பளி காப்பி மற்றும் மிளகு உற்பத்தி நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்து வாங்கப்பட்ட காப்பி கொட்டைகள் எந்திரங்களை கொண்டு மேல் தோல் நீக்கம் செய்யப்பட்டு, உலர வைத்து, கீழ் தோல் நீக்கப்படுகிறது. பின்னர் அவை தரம் பிரிக்கப்பட்டு நன்கு அரைக்கப்பட்டு காப்பி தூளுடன் சிக்கரி கலக்கப்படுகிறது. அதன் பின்னர் நவீன எந்திரம் கொண்டு சுத்தமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள் மாவட்டம், மாநில அளவிலான கண்காட்சி மூலமாகவும், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த கூட்டமைப்பின் காப்பித்தூள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொல்லிமலையில் விளையும் காப்பி மிகுந்த சுவை வாய்ந்ததாக உள்ளது. பொதுமக்கள் கொல்லிமலைக்கு வரும்போது அரப்பளி காப்பியை விரும்பி வாங்க நவீன விற்பனை நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலை விரிவுபடுத்தி லாபம் ஈட்டும் வகையில் செய்யுமாறும், மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்பெறும் வகையிலும் செயல்பட வேண்டும் என அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குனர் பிரியா, தாசில்தார் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்