நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு சேலத்தில் 10 இடங்களில் நடந்தது
நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சேலத்தில் 10 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது
சேலம்,
தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு மூலம் நேற்று எழுத்து தேர்வு நடந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் சேலம் சின்னதிருப்பதி ஜெயராம் கலை, அறிவியல் கல்லூரி, கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி உதவிபெறும் கல்லூரி, சோனா கல்லூரி உள்பட 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 11 மணி முதல் 12 மணி வரை இந்த தேர்வு நடந்தது.
சேலம் மாவட்டத்தில் சிவகங்கை, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 100 பேர் இந்த தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். சேலம் கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரி தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு தேர்வர்கள் வர தொடங்கினர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பதாரர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால் தேர்வு மையங்களுக்குள் செல்வதற்கு முன்பாக தேர்வர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும், செல்போன், புத்தகங்கள், பைகள், சாவிகள் உள்ளிட்ட எந்த பொருட்களும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்பது உள்பட விண்ணப்பதாரர்களுக்கு 13 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை கண்காணிப்பு அலுவலர்களான நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அனைத்து தேர்வு மையங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.