சங்ககிரி அருகே கட்டுமான பணியின் போது வீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலி

சங்ககிரி அருகே கட்டுமான பணியின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2021-07-31 20:26 GMT
சங்ககிரி
சுவர் இடிந்து விழுந்தது
ஈரோடு மாவட்டம் கரும்பாறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு சஞ்சித் என்ற 3 வயது குழந்தை இருந்தது. நேற்று புஷ்பா குழந்தை சஞ்சித்துடன் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஐவேலி கிராமம் வாணிநகருக்கு வந்தார். அங்கு வெங்கடேஷ் என்பவரின் புதிய வீடு கட்டுமான பணியில் தொழிலாளியாக வேலை பார்த்தார். குழந்தை சஞ்சித் அந்த கட்டிட பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சுவர் ஒன்று இடிந்து, குழந்தை மீது விழுந்தது.
குழந்தை பலி
இதில் சஞ்சித் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினான். இந்த சத்தம் கேட்டு புஷ்பா மற்றும் அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் பதறி அடித்துக்கொண்டு குழந்தையை காப்பாற்ற ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளை அகற்றி குழந்தையை மீட்டனர். அப்போது குழந்தை சஞ்சித் இடுபாடுகளுக்குள் சிக்கி பலியானது தெரியவந்தது. குழந்தையின் உடலை பார்த்து தாய் புஷ்பா கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்ககிரி அருகே கட்டுமான பணியின்போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்