எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் குமரிக்கு வந்தது

காஷ்மீரில் பலியான குமரியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2021-07-31 20:15 GMT
திருவட்டார், 
காஷ்மீரில் பலியான குமரியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
வீரர் பலி
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கூத்தவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 43). இவர் கடந்த 2002-ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு மீனா (38) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் ஸ்டீபன் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர். 
அமைச்சர் மரியாதை
அவரது உடலுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், திருவட்டார் யூனியன் தலைவர் ஜெகநாதன், கவுன்சிலர் ராம்சிங், ஏற்றக்கோடு பஞ்சாயத்து தலைவர் ஹெப்சிபாய் ரூத் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். 
பின்னர் ஸ்டீபனின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு, எல்லை பாதுகாப்புப் படை ஆய்வாளர் ெரவிகுமார் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்