மேகதாது திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்; அரசுக்கு, டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அரசுக்கு, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.;
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
உடனடியாக தொடங்க வேண்டும்
மேகதாதுவில் அணைகட்டுவதன் மூலம் கர்நாடகத்திற்கு சொந்தமான தண்ணீரை பயன்படுத்தி கொள்ள முடியும். மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் உடனடியாக மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை கர்நாடக அரசு தொடங்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும், அரசுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சி இருக்கும்.
மேகதாதுவில் அணைகட்டும் திட்டம், பெங்களூரு நகரின் குடிநீருக்காகவும், மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளான பா.ஜனதா, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர். அவருக்கு மேகதாதுவில் அணைகட்டும் திட்டம் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார்.
மத்திய அரசுக்கு அழுத்தம்
மேகதாதுவில் அணைகட்டுவதற்கு சுற்றுசூழல் துறையின் அனுமதி கிடைத்திருப்பதால், அந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற துறைகளின் அனுமதியை பெற்று மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அணை கட்டும் திட்டத்தை தொடங்குங்கள், உங்களுக்கு (அரசு) தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் செய்து கொடுக்கும்.
மந்திரிசபை விரிவாக்கம் செய்வது, பா.ஜனதா கட்சியின் உள்விவகாரம் ஆகும். அதில், தலையிட விரும்பவில்லை. மாநில நலனுக்கு மேகதாதுவில் அணைகட்ட வேண்டும். அந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.