காட்டில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உள்பட 2 பேர் சிறுத்தை தாக்கி படுகாயம்; உப்பிலியபுரம் பகுதியில் பரபரப்பு
உப்பிலியபுரம் பகுதியில் செல்பி எடுக்க ஆசைப்பட்டபோது வாலிபர் உள்பட 2 பேர் சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது;
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் பகுதியில் செல்பி எடுக்க ஆசைப்பட்டபோது வாலிபர் உள்பட 2 பேர் சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி எல்லைக்குட்பட்டது ஆங்கியம் கிராமம். வனப்பகுதியின் அருகில் உள்ள இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணனின் மனைவி மகேஸ்வரி (வயது 47). இவர் நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க ஆங்கியத்தை ஒட்டியுள்ள கரடு பக்கம் சென்றுள்ளார்.
அப்போது அந்தவழியாக சிறுத்தை நடமாட்டத்தை கண்டதும், சமயோசிதமாக உயிருக்கு பயந்து தரையோடு தரையாக படுத்திருந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து எழுந்த மகேஸ்வரி ஓட்டமும் நடையுமாக ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
தேடிய பொது மக்கள்
ஆனால் மகேஸ்வரி சொன்னதை நம்பாத பொதுமக்கள், வதந்தியை கிளப்பி விடுகிறார் என்று எதார்த்தமாக இருந்துள்ளனர். காலை 10 மணியளவில் ஆங்கியம் கரட்டிலிருந்து, கோனேரிப்பட்டி முருகன் கோவில் கரட்டிற்கு இடம் பெயர்ந்த சிறுத்தையை, வயல்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலித்தொழிலாளிகள் பார்த்துள்ளனர்.
அவர்களும் தப்பித்தோம், பிழைத்தோம் என அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் திரண்டு வந்து சிறுத்தையை தேடிய நேரத்தில், சிறுத்தை இடம் பெயர்ந்து மீண்டும் ஆங்கியம் கரட்டில் தஞ்சம் புகுந்தது. இதை கேள்விப்பட்ட ஆங்கியத்தை சேர்ந்த மனோகரனின் மகன் ஹரிபாஸ்கர்(வயது 21), விவசாயி துரைசாமி(60), நல்லேந்திரன்(55), கோனேரிப்பட்டியை சேர்ந்த சவுந்தர்ராஜன்(45) ஆகியோர் ஆங்கியம் கரட்டில் சிறுத்தையை தேடினார்கள்.
சிறுத்தை தாக்கி 2 பேர் படுகாயம்
அப்போது, சிறுத்தையை தேடும் போது செல்பி எடுக்க ஆசைப்பட்ட ஹரிபாஸ்கர் கையில் தடியுடன் செல்போனில் படம் எடுத்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 6 அடி நீளமும், 3 அடி உயரமும் கொண்ட 6 வயதான சிறுத்தை செல்பி எடுக்கும் மோகத்தில் இருந்த ஹரிபாஸ்கர் மற்றும் துரைசாமியை மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கியது.
பின்னர் அது அங்குள்ள கரட்டு பகுதியில் இருந்த குகையினுள் தஞ்சமடைந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையினர், போலீஸ் குவிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா தலைமையில், கோட்ட வன சாலை அலுவலர் ஆனந்த குமார், துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி, திருச்சி வனச்சரகர் குணசேகரன், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், தாத்தையங்கார்பேட்டை இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் வன அலுவலர்களும், போலீசாரும் கரட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஹேமலதா மற்றும் ஆணையர்கள், வருவாய்த்துறை அதிகரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வனத்துறையினரிடமும், போலீசாரிடமும் நிலைமையை கேட்டறிந்தனர்.
டிராப் கேமரா பொருத்தம்
மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய ஆங்கியம் கரட்டின் இருபக்கங்களிலும் வனத்துறையினரால், இரவிலும் துள்ளியமாக படம் பிடிக்கும் டிராப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகளுக்கான ஆம்புலன்ஸ், மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை முன்னிட்டு இப்பகுதியில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலித்தொழிலாளிகள், விவசாயிகளின் வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கியத்தை ஒட்டியுள்ள கொல்லிமலை வனப்பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர வாய்ப்பிருப்பதாகவும், அதனால் புளியஞ்சோலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆபத்து இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.