3-வது அலையை சமாளிக்க 1,200 படுக்கைகள் தயார் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன கருவிகள்; திருச்சி அரசு மருத்துவமனை டீன் தகவல்
3-வது அலையை சமாளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும், இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன சிகிச்சை கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
திருச்சி,
3-வது அலையை சமாளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும், இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன சிகிச்சை கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதய சிகிச்சைக்கு நவீன கருவிகள்
திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், மருத்துவ துறை பேராசிரியர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாரடைப்பு பிரச்சினைகள் ஏற்படும் போது இதயத்தில் அடைப்பு அல்லது சுருக்கம் ஏற்படும். அப்போது அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
தற்போது அரசு மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதியதாக 2 நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நவீன கருவிகள் மூலம் இதுவரை 7 பேர் பயனடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.
இலவச சிகிச்சை
இந்த நவீன கருவிகளை பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும். ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நவீன கருவிகள் மூலம் இதயத்தில் எந்த இடத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை துள்ளியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் நன்கு குணமடைந்து வீடுகளுக்கு செல்லலாம்.
1,200 படுக்கை வசதி
கொரோனா 3-வது அலையில் நெருக்கடி நிலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவில் 200 படுக்கை வசதிகள், 20 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள், 16 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. மேலும் நோய்த்தொற்று அதிகரித்தால் 600 படுக்கை வசதிகள் சிறப்புப் சிகிச்சைப்பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
தனி மையம்
2-வது அலையில் ஏற்பட்டது போல் 3-வது அலையில் நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்காக 35 படுக்கை வசதியுடன் தனி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டத்தை தவிர்ப்பதோடு, தொற்று பாதித்தவருக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இங்கு முதலுதவி சிகிச்சைகளான ரத்த அழுத்த அளவு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை கணக்கிட்டு, நோய் அறிகுறியை வைத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமா? அல்லது வீட்டில் தனிமைப்படுத்த வேண்டுமா? என்று மருத்துவர்களின் ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவர். ஏற்கனவே இங்கு 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது பிரதமரின் நிவாரண நிதி உதவியில் நடக்கிறது. மேலும் சர்வதேச மருத்துவர்கள் நிதியில் விரைவில் இன்னொரு பி.எஸ்.ஏ. பிளாண்ட் விரைவில் அமைய உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ேபட்டியின் போது, திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், மருத்துவ அலுவலர் குமரேசபதி, துறை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.