நிலக்கரி வாங்கிய ஊழல் புகாரில் சிக்கிய 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
புகளூர் காகித ஆலையில் நிலக்கரி வாங்கிய ஊழல் புகாரில் சிக்கிய 2 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து செயல் இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.;
நொய்யல்
நிலக்கரி வாங்கியதில் முறைகேடு
கரூர் மாவட்டம், புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் முதன்மை பொது மேலாளராக (வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல்) பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணி. மேலாளராக (ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை) பணியாற்றி வந்தவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் புகளூர் காகித ஆலை நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தரமற்ற (ஈரப்பதம் அதிகமுள்ள) நிலக்கரியை டாலர் பரிவர்த்தனை மூலம் கடந்த 4 ஆண்டுகளாக வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
இந்நிலையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட ராஜூவ் ரங்கன் புகளூர் காகித ஆலை நிறுவனத்தின் பழைய கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் முதன்மை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் காகித ஆலையின் செயல் இயக்குனர் (உற்பத்தி) கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடிக்கணக்கில் முறைகேடு
நிலக்கரி இறக்குமதி செய்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது தான் நிலக்கரி ஊழலில் இவர்கள் இருவர் மட்டும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? அல்லது மற்ற எவரேனும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்பது குறித்து தெரியவரும். பாலசுப்பிரமணி நேற்று ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.