உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு நடுரோட்டில் மனைவியை தாக்கி தாலி கயிற்றை அறுத்து கணவர் ரகளை
உளுந்தூர்பேட்டையில் நடுரோட்டில் மனைவியை தாக்கி தாலி கயிற்றை அறுத்து கணவர் ரகளையில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது
உளுந்தூர்பேட்டை
தாலி கயிற்றை அறுத்து ரகளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள சாலையில் மதுபோதையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், அவரது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் போதையின் உச்சத்தில் இருந்த வாலிபர், தனது மனைவியின் கன்னத்தில் அறைந்தார். பின்னர் தலை முடியை பிடித்து இழுத்துச்சென்ற அவர், திடீரென மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை அறுத்து ரகளையில் ஈடுபட்டார்.
போலீசிடம் கெஞ்சிய பெண்
இதை அந்த வழியாக மொபட்டில் வந்த பெண் போலீஸ் ஒருவர் பார்த்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் 2 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல அவர் முயன்றார். உடனே அந்த பெண், தனது கணவரை விட்டுவிடுமாறு கெஞ்சினார். இதையடுத்து அந்த பெண் போலீஸ், அந்த வாலிபரை விட்டுவிட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் திருச்சி மார்க்கமாக சென்ற ஒரு பஸ்சில் ஏறி சென்றனர். நடுரோட்டில் மனைவியை தாக்கி, தாலி கயிற்றை அறுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.