சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
சீர்காழி நகராட்சிக்கு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகிறார்கள்.
குப்பை கிடங்கு தீப்பிடித்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த 24 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரிக்கப்பட்டு பின்னர் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு தினந்தோறும் சேகரிக்கப்படும் பல டன் எடையுள்ள குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்காக மலைபோல் குவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ நேரம் செல்ல செல்ல மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குப்பை மலைபோல குவிந்து கிடப்பதால் தீயணைப்பு பணி பெரும் சவாலாக இருந்து வருகிறது. தொடர்ந்து தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி குடிநீர் வாகனம் மற்றும் பொக்லின் எந்திரம், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.
பொதுமக்கள் அச்சம்
இதன் காரணமாக அருகில் உள்ள கோவிந்தராஜன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் தமயந்தி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், பொறியாளர் தனராஜ் ஆகியோர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதியிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடுதல் தீயணைப்பு வாகனம் மூலம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.