முன்பதிவு சீட்டு ஆங்கிலம், மலையாளத்தில் இருப்பதால் பயணிகள் அவதி
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் வழங்கப்படும் முன்பதிவு சீட்டு ஆங்கிலம், மலையாளத்தில் இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் வழங்கப்படும் முன்பதிவு சீட்டு ஆங்கிலம், மலையாளத்தில் இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
பயணிகள் அவதி
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் ரெயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர். மேலும் டிக்கெட் ரத்து செய்வது, தட்கலில் பயணம் செய்வதற்கும் விண்ணப்பிக்கின்றனர்.
டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த விண்ணப்பத்தின் ஒருபுறம் தமிழ் மற்றொரு புறம் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த விண்ணப்பம் காலியாக விட்டதாக கூறி, தட்கலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை வழங்குகின்றனர்.
அந்த விண்ணப்பத்தின் ஒருபுறம் மலையாளமும், மற்றொரு புறம் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து முன்பதிவு அலுவலகத் தில்கேட்ட ேபாது முறையாக பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
போராட்டம் நடத்த திட்டம்
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு சாதாரண மக்களே அதிகம் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வருகின்றனர். தமிழில் அச்சடிக்கும் விண்ணப்பத்தை படித்து பார்த்து எளிதில் பூர்த்தி செய்தனர்.
ஆனால் தற்போது அந்த விண்ணப்பம் இருப்பு இல்லை என்று கூறி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆங்கிலம், மலையாள மொழியில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்குகின்றனர். இதனால் அந்த விண்ணப்பத்தை படிக்க தெரியாத மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஆங்கிலம் தெரிந்த நபர்கள் வருகிறார்களா? என்று காத்திருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டிய உள்ளது. இதற்கிடையில் யாரும் வரவில்லை என்றால் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முடியாமல் திரும்பி செல்ல வேண்டிய உள்ளது.
ஏற்கனவே பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி இருப்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் புறக்கணிப்படுவது உறுதியாகிறது. இதனால் பொள்ளாச்சியை மதுரை அல்லது சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
எனவே தமிழில் அச்சடித்த விண்ணப்பத்தை வழங்கவில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய இருக்கும். இதுகுறித்து பாலக்காடு கோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.