கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நார் தொழிற்சாலை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்அரசு (வயது 50). இவர் அதே பகுதியில் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
தொழிற்சாலையில் நார் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் காய்ந்த நிலையில் தென்னை மரம் ஒன்று நின்றிருந்தது. இந்த தென்னை மரம் திடீரென காற்றுக்கு தாக்குபிடிக்காமல், அந்த வழியாக சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு, தென்னை நார் மீது விழுந்தது.
தீ விபத்து
இதனால் தென்னை நாரில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தென்னை நார் முழுவதும் தீ பரவியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5 மணி நேரம் போராடி அணைத்தனர்
தீயணைப்பு வீரர்கள் கொண்டு வந்த வாகனங்களில் தண்ணீர் தீர்ந்து விட்டதால், உடனடியாக தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.