புனித பரலோக மாதா ஆலய திருவிழா எளிய முறையில் நடைபெறும்; பிஷப் அந்தோணிசாமி தகவல்
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய திருவிழா எளிய முறையில் நடைபெறும் என பிஷப் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்தாண்டும் தொடர்வதால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விண்ணேற்பு பெருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமநாயக்கன்பட்டியில் பாளை. மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிய முறையில் விண்ணேற்பு திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளான 6-ந் தேதி கொடியேற்றம், 15-ந் தேதி தேர்பவனி மற்றும் நற்கருணைப்பவனி ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டும் நடைபெறும். 15-ந் தேதி அன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி நடைபெறும். ஏனைய திருப்பலிகள் ஜெபமாலை தோட்டத்தில் காலை 8, 10, 12 மற்றும் இரவு 7 மணிக்கு நடைபெறும். திருப்பலி நிகழ்ச்சிகளை மக்கள் எளிதில் காணும் வகையில் இணையதளம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புனித பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்ட் அமல் ரீகன், வண்டானம் பங்குத்தந்தை மாசில்லா மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.