நீலகிரியில் 240 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
நீலகிரியில் நோய் எதிர்ப்பு சக்தியை அறிய 240 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஒருநாள் தொற்று பாதிப்பு தற்போது சராசரியாக 40 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 541 ஆக குறைந்துவிட்டது. கொரோனா பரவுவதை தடுக்க தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 408 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 35 பேருக்கு முதல் டோஸ், 84 ஆயிரத்து 373 பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டு இருக்கிறது. கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை சதவீதம் பேருக்கு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிய பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. முதல் அலையில் 13 சதவீதம் பேருக்கு பரிசோதனை முடிவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா 2-வது அலையில் நோய் எதிர்ப்பாற்றலை அறிய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீலகிரியில் தொற்று பரவும் பகுதியாக கண்டறியப்பட்ட(கிளஸ்டர்) 8 இடங்களில் வசித்து வந்த தலா 30 பேர் என மொத்தம் 240 பேரிடம் இருந்து ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதன் முடிவு வந்த பின்னர் கொரோனா 2-வது அலையில் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை சதவீதம் பேருக்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.