போடி அருகே காற்றாலையில் பயங்கர தீ
போடி அருகே தனியார் காற்றாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது காற்றாடியின் இறக்கைகள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போடி:
போடி அருகே தனியார் காற்றாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது காற்றாடியின் இறக்கைகள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காற்றாலையில் தீவிபத்து
போடியை அடுத்த நாகலாபுரம் மல்லிங்கர் சாமி கோவில் அருகே தனியார் நிறுவனத்தின் காற்றாலை உள்ளது. இந்த காற்றாலையில் உள்ள ஒரு காற்றாடியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த காற்றாலை பொறுப்பாளர் சுரேஷ், தேனி மாவட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் கல்யாணகுமார், போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 165 அடி உயரம் கொண்ட காற்றாடியின் உச்சியில் தீப்பிடித்து எரிந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இறக்கைகள் விழுந்தன
இதற்கிடையே தீப்பிடித்து எரிந்ததில் காற்றாடியின் 2 ராட்சத இறக்கைகள் முறிந்து கீழே விழுந்தன. அப்போது தீயணைப்பு படைவீரர்கள் விலகியதால் உயிர் தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுமார் 2 மணி நேரம் போராடி காற்றாடியில் எரிந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக காற்றாலை நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீவிபத்து குறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.