விழுப்புரம் நகரில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 52 கடைகளுக்கு அபராதம் அதிகாரி நடவடிக்கை
விழுப்புரம் நகரில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 52 கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் காமராஜர் வீதி, திரு.வி.க. சாலை, நேருஜி சாலை, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்று நேற்று தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், இருசக்கர வாகன ஷோரூம்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூம்கள் என 10 கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் குளிர்சாதன வசதியை பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும் அந்த கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
52 கடைகளுக்கு அபராதம்
இதையடுத்து அந்த 10 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் ரூ.5 ஆயிரத்தை அதிகாரிகள் அபராதமாக வசூலித்தனர். இதேபோல் கொரோனா பாதுகாப்பு விதியை பின்பற்றாத மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 42 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இனிமேலும் இதுபோன்று அரசின் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இருந்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனம்
திண்டிவனம் நேரு வீதியில் சில கடைகளில் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்தது. இதுபற்றி அறிந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இயங்கிய பல்பொருள் அங்காடி, ஒரு மளிகை கடை ஆகியவற்றை அதிகாரிகள் பூட்டினர். அப்போது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.