விழுப்புரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-31 16:44 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேடு மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 42). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரும், அவரது மனைவி மகேஸ்வரியும் தினமும் காலையில் ஓட்டலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் தங்கள் ஓட்டலுக்கு சென்றனர். பின்னர் பகல் 12 மணியளவில் மணிகண்டன் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

15 பவுன் நகை கொள்ளை

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மரத்தினால் ஆன அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 பவுன் நகை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

இதுபற்றி அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலீஸ் மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

இந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது, ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்