சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பெண் பலி; கணவரின் கதி என்ன?

சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பெண் பலியானார். உடன் மூழ்கிய அவரது கணவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2021-07-31 16:41 GMT
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பெண் பலியானார். உடன் மூழ்கிய அவரது கணவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. 
முல்லைப்பெரியாறு
தேனி மாவட்டம் கம்பம் சுங்கம் தெருவை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அமீனா பேகம் (40). இவர்களது மகள் அனிஷா (12). 
இந்தநிலையில் அபுதாகீர் நேற்று தனது மனைவி, மகளுடன் பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றனர். அப்போது அபுதாகீரின் மகள் ஆற்று நீரில் இழுத்து செல்லப்பட்டாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அபுதாகீரும், அமீனாபேகமும் ஆற்றில் குதித்து தங்களது மகளை காப்பாற்ற முயன்றனர். மேலும் அபயகுரல் எழுப்பினர். 
பெண் பலி
அப்போது அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், ஆற்றில் குதித்து அபுதாகீரின் மகளை காப்பாற்றினர். இதற்கிடையே ஆற்றில் குதித்த அபுதாகீரும், அமீனாபேகமும் ஆற்று நீரில் மூழ்கினர். உடனே அந்த இளைஞர்கள், தம்பதியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கும், சின்னமனூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் சின்னமனூர் போலீசார் ஆற்றில் இறங்கி தம்பதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்த நிலையில் அமீனா பேகத்தின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் அபுதாகீரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தற்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அபுதாகீரை ேதடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இருப்பினும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் கோட்டூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் முல்லைப்பெரியாற்றின் கரையோரங்களில் அபுதாகீரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு 7 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதன்பிறகு ேதடும் பணி நிறுத்தப்பட்டது.
ஆற்றில் ஆபத்து
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், ஆற்றில் மூழ்கிய அபுதாகீரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் நடைபெறும். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஆற்றில் கடந்த சில நாட்களாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் முல்லைப்பெரியாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனை அறியாமல் பலர் இதுபோன்ற ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே முல்லைப்பெரியாற்றில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றனர். 
இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை காப்பாற்ற முயன்று பெண் பலியான சம்பவம் சின்னமனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்