விருத்தாசலம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்காததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

விருத்தாசலம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்காததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-07-31 16:30 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த பேரளையூர், கருவேப்பிலங்குறிச்சி, சத்தியவாடி, ஆலந்துரைப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். குறுவை அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பேரளையூர் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள் இரவு பகலாக அங்கேயே காத்துக்கிடக்கின்றனர். 

கனமழையால் சேதம்

இந்நிலையில் கடந்த சில தினங்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் தேங்கி நெல் மணிகள் சேதமடைவதுடன், முளைத்தும் வருகிறது. பின்னர் வெயில் அடிக்கும் போது, விவசாயிகள் அதை உலர வைக்கின்றனர்.  நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை திறக்கப்படாமலும், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் அனைத்து நெல்லும் முளைப்பு வந்து தரமற்ற நெல் விதைகளாக மாறும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்து காத்திருக்கிறோம். ஆனால் அரசு அதிகாரிகள், கொள்முதல் நிலையத்தை திறக்காமல் உள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேரளையூர் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்