இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தற்காலிக ஊழியர்கள் தர்ணா
பணிக்கு செல்ல அனுமதிக்காததால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தற்காலிக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகூர்:-
பணிக்கு செல்ல அனுமதிக்காததால் இந்தியன் ஆயின் கார்ப்பரேஷன் நிறுவன தற்காலிக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிக ஊழியர்கள்
நாகூரை அடுத்த முட்டம் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய 15 பேர், இங்கு 27 ஆண்டுகளாக தற்காலிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த கொரோனா முதல் அலையின் போது ஏப்ரல் மாதம் வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் முதல் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர்.
தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு தனிக்குழு அமைத்து 2 வாரங்களில் விசாரணை செய்து மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன நிர்வாகம் 12 தற்காலிக ஊழியர்களை நேற்று முன்தினம் முதல் பணி செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் தற்காலிக ஊழியர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகூர் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.