கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
கொடைக்கானல்:
வார விடுமுறை தினத்தையொட்டி, ‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகரித்தது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.
இதேபோல் இளைஞர்கள் பலர், மோட்டார் சைக்கிள்களிலேயே கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.
வாகனங்களின் அணிவகுப்பால், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் நட்சத்திர ஏரியை சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்தனர்.
இதேபோல் பாம்பார்அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, அப்பர்லேக்வியூ ஆகியவற்றை கண்டுகளித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் நிலவிய, இதயத்தை வருடும் இதமான வானிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அதேநேரத்தில், அம்மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இது, கொடைக்கானலுக்கு வருகை தரும் பிற சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே கேரள மாநில சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கலாமா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.