அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-31 16:00 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா தொற்று

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. 

ஊரடங்கு காலத்தில் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்றும், அன்றாடம் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜைகள் கோவில் அலுவலர்களால் மட்டும் நடத்திக் கொள்ளவும், பொதுமக்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு கோவில்களில் அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாசலேஸ்வரர் கோவில்

எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் உட்பட அனைத்து பிராதான கோவில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. 

மேலும் ஆகமவிதிப்படி சாமி அலங்காரங்கள், பூஜைகள் அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்