தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-07-31 15:48 GMT
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி உள்ளது. இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியின்போது சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு 5 கால சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். கொரோனா பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி கோவில் பட்டாச்சாரியார்கள் மட்டும் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருமஞ்சனப்பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். பின்னர் பைரவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் உள்ள சுயம்பு நாகேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் இருக்கும் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்