பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மண்ணை வளமாக்க வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மண்ணை வளமாக்க வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-07-31 15:36 GMT
போடிப்பட்டி:
பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மண்ணை வளமாக்க வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நவீன தொழில் நுட்பங்கள்
இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய உற்பத்தியைப் பெருக்கியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இந்திய வேளாண்மையில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிட்டு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளோம். அதேநேரத்தில் அதிக மகசூல் பெறும் நோக்கத்தில் அதிக அளவிலான ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாலும், அங்கக உரங்களின் பயன்பாடு குறைந்ததாலும் மண்வளம் பாதிக்கப்படுகிறது.
இதனால் மண்ணின் உற்பத்தித்திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே இழந்த மண்வளத்தை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதற்கு பெருமளவில் உதவுவது பசுந்தாள் உரங்களாகும். தற்போது இயற்கை வேளாண்மை செய்பவர்கள் சணப்பை, தக்கைப் பூண்டு, அகத்தி, கொழிஞ்சி, சங்குப்பூ, சூபா புல் போன்ற பசுந்தாள் உரப்பயிர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கென தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சணப்பை மற்றும் அகத்தியில் கோ 1,கொழிஞ்சியில் எம்டியு 1 ஆகிய ரகங்களை வெளியிட்டுள்ளனர். 
நுண்ணூட்டத்தேவை
இதுதவிர தட்டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு, துவரை போன்றவற்றையும் பசுந்தாள் உரப்பயிர்களாகப் பயன்படுத்தலாம். பசுந்தாள் உரப்பயிர்களின் வேர்களிலுள்ள வேர்முடிச்சுகள் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜனை கிரகித்து மண்ணுக்குக் கொடுக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்களை பூக்கும் பருவத்தில் (சுமார் 50 முதல் 60 நாட்கள்) மடக்கி உழுவதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தலாம். 
இதன்மூலம் ஏக்கருக்கு 3 முதல் 10 டன் வரை உயிர்ப் பொருட்களும், 35 முதல் 60 கிலோ வரை தழைச்சத்தும் கிடைக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மக்கச்செய்வதன் மூலம் மண்ணின் கரிம வளத்தை அதிகரிப்பதுடன் மண்புழுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்க முடியும். மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி அதிகரிப்பதுடன் பயிர்களின் நுண்ணூட்டத்தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. 
நோய் தாக்குதல்
இதனால் உரங்களின் பயன்பாடு குறைகிறது. மேலும் மண் அரிமானத்தைத் தடுப்பதுடன் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனும் அதிகரிக்கிறது. மேலும் களைகளைக் கட்டுப்படுத்துவதுடன் வேர் நூற்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பசுந்தாள் உரப்பயிர்களை உரமாக்குவதன் மூலம் 15 சதவீதம் முதல் 20சதவீதம் வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும்.
 அத்துடன் பயிர் சுழற்சியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பயிர்களைப்பயன்படுத்தினால் நோய் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பதால் அதனைத்தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு உடுமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்