பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் - சீர்காழியில் நடந்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சீர்காழியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது முபின், மாவட்ட துணைத் தலைவர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், கர்நாடக அரசு காவிரியில் கட்டிவரும் மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு துறைகளை தனியார் மயமாக்க கூடாது. விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட குறுவை, சம்பா விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி நகர தலைவர் ரகுநாதன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர பொருளாளர் சம்பந்தம், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அமைப்பாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.