தொழிலாளியை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிள் பறிப்பு
செம்பட்டி அருகே, தொழிலாளியை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பட்டி:
மோட்டார் சைக்கிளில் பயணம்
மதுரை அருகே உள்ள கருப்பாயூரணியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 32). கூலித்தொழிலாளி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் வந்தார். அங்குள்ள வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கோவைக்கு பஸ்சில் சென்றார்.
பின்னர் பஸ்சில் கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்து இறங்கிய முத்துப்பாண்டி, தனது ேமாட்டார் சைக்கிளில் செம்பட்டி வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் செம்பட்டி-பழனி சாலையில் எஸ்.பாறைப்பட்டி-ராமநாதபுரம் இடையே தனியார் தோட்டத்தின் அருகே அவர் வந்து கொண்டிருந்தார்.
கத்திக்குத்து
அப்போது முத்துப்பாண்டியை பின்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள், முத்துப்பாண்டியின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் மோட்டார் சைக்கிளை பறித்து செல்ல முயன்றனர். இதனை தடுத்த முத்துப்பாண்டியை கத்தியால் குத்தினர். இதில் நிலைதடுமாறி முத்துப்பாண்டி கீழே விழுந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளை அவர்கள் எடுத்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் சாலையோரத்தில் ரத்தக்காயத்துடன் முத்துப்பாண்டி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீ்ஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த முத்துப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்துப்பாண்டியை கத்தியால் குத்தியதற்கு முன்விரோதம் காரணமா? அல்லது மோட்டார் சைக்கிளை பறிப்பதற்காக நடந்த சம்பவமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----------