மாமூல் கேட்டு வியாபாரியை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
வேலூரில் மாமூல் கேட்டு வியாபாரியை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோட முயன்றபோது தவறி விழுந்ததில் அவரின் கை முறிந்தது.
வேலூர்
வேலூரில் மாமூல் கேட்டு வியாபாரியை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோட முயன்றபோது தவறி விழுந்ததில் அவரின் கை முறிந்தது.
வியாபாரிக்கு வெட்டு
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாலு (வயது 40). இவர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகடை வைத்துள்ளார்.
பாலு கடந்த 29-ந் தேதி அதிகாலை மார்க்கெட்டில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் வசூர்ராஜாவின் கூட்டாளிகள் என்று கூறி மாமூல் கேட்டுள்ளனர். அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென கத்தியால் பாலுவின் தலையில் வெட்டினர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
அதில், பாலுவை வெட்டியது வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த அறுப்பு ராமச்சந்திரன் (வயது 35), ரவி (40), உதயா (38), வேலப்பாடியை சேர்ந்த தாமு (30) என்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அறுப்புராமச்சந்திரன், ரவி, தாமு ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த உதயாவை போலீசார் தேடி வந்தனர்.
தவறி விழுந்து கை முறிந்தது
இந்த நிலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகே உதயா பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரை பிடிக்க போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் உதயா அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் விரட்டி சென்றபோது தவறிவிழுந்ததில் உதயாவின் வலது கையில் முறிவு ஏற்பட்டது.
வலியால் அலறிதுடித்த அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உதயா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.