வேதாரண்யத்தில் ரூ.25 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு
வேதாரண்யத்தில் தடை செய்யப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 4 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் புஷ்பராஜ், வேதாரண்யம் துணை போலீஸ் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிக்கொடி, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.
இதில் 4 கடைகளில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடைகளில் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடற்கரைச் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் வைத்து அழித்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் கூறுகையில்.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வேதாரண்யம் போலீசார், 4 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.