ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் துணிகரம்; பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணம் திருட்டு
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணத்தை திருடிச்சென்ற மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.;
பிரசவத்துக்கு அனுமதி
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 43). இவர், தனது மகள் ஷீலாவை பிரசவத்துக்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அப்போது மகள் அணிந்து இருந்த தாலி சங்கிலி, கம்மல், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை தனது மணிபர்சில் போட்டு பிரசவ வார்டு அறைக்கு வெளியே அமர்ந்து இருந்தார்.அங்கு வந்த 60 வயது மூதாட்டி ஒருவர், தனது பெயர் மல்லிகா என்றும், தனது மகளையும் இங்கு பிரசவத்துக்காக சேர்த்து உள்ளதாக சாந்தியிடம் பேச்சு கொடுத்தார்.
ரத்த வங்கி
பின்னர் பிரசவத்துக்கு அனுமதித்துள்ள நம் மகள்களுக்கு ரத்தம் தேவைப்படும். எனவே ரத்த வங்கிக்கு சென்று கேட்டு வரலாம் என சாந்தியை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வரும்படி மூதாட்டி அழைத்தார்.அதை உண்மை என்று நம்பிய சாந்தியும், மூதாட்டி மல்லிகாவுடன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவர், ரத்த வங்கிக்குள் அதிக நகைளோடு செல்லக்கூடாது. நகை ஏதும் இருந்தால் கொடுங்கள். பத்திரமாக வைத்துக் கொள்வதாக மல்லிகா கூறினார்.
நகை, பணம் திருட்டு
அதை நம்பி நகை, பணம் வைத்திருந்த மணிபர்சை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சாந்தி ரத்த வங்கிக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மூதாட்டி மல்லிகாவை காணவில்லை.பின்னர்தான் அவர் தன்னிடம் நூதன முறையில் நகை, பணத்தை திருடிச்சென்றதை தெரிந்து சாந்தி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார், மூதாட்டி மல்லிகாவை தேடி வருகின்றனர்.