சேலத்தில் 44-வது வார்டு பகுதியில் ஆய்வு பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் உறுதி
சேலத்தில் 44-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
சேலம்
ஆய்வு
சேலம் மாநகராட்சி 44-வது வார்டு எருமாபாளையம் சுண்ணாம்பு சூளை தெருவில் சுமார் 60 குடும்பங்களுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு வசதி, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, சுகாதார வசதி மற்றும் பிற வசதிகள் வேண்டி பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை உடனே நிவர்த்தி செய்திட வேண்டும் என்கிற அடிப்படையில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று சம்பந்தப்பட்ட எருமாபாளையம் சுண்ணாம்பு சூளை தெருவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அப்பகுதி முழுவதையும் சுற்றி பார்த்து பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதை அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
அடிப்படை வசதிகள்
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில், பல ஆண்டு காலமாக இந்த பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக பொது சுகாதார வளாகங்கள், சாக்கடை வசதிகள் ஆகியவற்றை உடனே செய்து தர வேண்டும். சாக்கடை கால்வாய்களில் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இந்த பணிகளை உடனடியாக எங்களுக்கு செய்து தரவேண்டும் என ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து அப்பகுதி மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர முடியும் என்பதை சர்வே செய்து, செய்யப்பட வேண்டிய பணிகளை உடனே நிறைவேற்ற அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
அலுவலர்களுக்கு அறிவுரை
தொடர்ந்து எருமாபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யவும், தடையில்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.