ஆத்தூர் அருகே தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலைமறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஆத்தூர் அருகே தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆத்தூர்
பட்டா நிலத்தில் வேலை
ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சி புதூர் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் சுமார் 150 பேர் வேலை பார்த்து வந்தனர். அப்போது பாலுசாமி என்பவர், தனது பட்டா நிலத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதனை அனுமதிக்க கூடாது என்று வட்டார வளர்ச்சி அலுவர் வெங்கட்ராமனிடம், பாலுசாமி புகார் கூறினார்.
இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன், தொழிலாளர்களிடம் இங்கு வேலை செய்ய வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
சாலைமறியல்
உடனே தொழிலாளர்கள் அங்கு வேலை செய்வதை நிறுத்தி விட்டனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற தகவல் பரவியது. இதையடுத்து தொழிலாளர்கள், நாங்கள் பார்த்த வேலைக்கு சம்பளம் வேண்டும் என்று கூறி புதூர்- பைத்தூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் பேசி முடிவு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளறுபடி
போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், தனிநபருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்களுக்கு வேலை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. கடந்த 2 நாட்களாக அந்த இடத்தில்தான் நாங்கள் முட்களை அகற்றி நிலத்தை சமன் செய்தோம். இப்போது சம்பளம் குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற குளறுபடிகளை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்றனர்.